Wednesday, February 20, 2008

மரணம் என் விருந்தாளி

மரணமே
நீ மந்திரக் கம்பளம்;
உன்னைப் போர்த்திக்
கொண்டு
ஒவ்வொருவராய்
மறைந்து போகிறோம்

உன்னைத் தழுவுகிற
ஒவ்வொருவனுக்கும்
அமர வாழ்வு
ஆரம்பமாகிறது

எங்கள் மரணங்களை
முடிவுக்குக் கொண்டுவரும்
மரணமே
அன்பான் விருந்தாளியே
வா

உயிரைப் பரிமாறி
உன்னை உபசரிக்க
எல்லோரும்
காத்துக் கொண்டிருக்கிறோம்
*

Tuesday, February 19, 2008

ஊடும் கவிதை

சொற்கள்
சன்னற் கம்பிகள்
அவற்றினிடையே
எப்போதோ
அரிதாகத் தோன்றும்
உன்முகம்

வார்த்தைகள்
உன்னை வரவேற்க
நான் தூவி வைக்கும் மலர்கள்;
நீ
வராமலும் போகலாம்

கவிதையே
துயிலில்
அனுமதியின்றி
வந்து செல்லும்
கனவு நீ

உன் ஊடலே
நம் நட்பை
நிரந்தரமாக்கி வைத்திருக்கிறது
*

நூல்

புத்தகத்திற்கு
'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்

நூல்
ஆடைகளைத் தயாரிக்கிறது
புத்தகம்
மனிதர்களைத் தயாரிக்கிறது

ஒன்று பஞ்சிலிருந்து
வந்தது;
மற்றொன்று
நெஞ்சிலிருந்து வந்தது

ஒன்று
கிழிந்த துணிகளைத் தைக்கிறது;
மற்றொன்று
கிழிந்த மனிதர்களைத் தைக்கிறது

ஏதோ ஒரு வகையில்
நூலும் புத்தகமும்
நம்மைக் கட்டி வைக்கின்றன

நூல், புத்தகம்
இரண்டுக்கும்
முள் உறவுகள் உண்டு

புத்தகத்திலும்
உயிர்மெய் எழுத்துக்கள்;
நூல் ஆடைக்குள்ளும்
உயிர் மெய் எழுத்துக்கள்

*

Monday, February 18, 2008

ஒரு கவிதையைப் போல்

ஒரு கவிதையைப்போல் இரு
அளவாக
ஆழமாக
அர்த்தங்கள் ஆயிரம்
சுரக்கும் நயங்களோடு
இதயங்களில் நிரந்தரமாக
எழுதி வைக்கப்படும்
இறவாத சொற்களோடு
ஒரு கவிதையைப்போல் இரு

ஒரு பூவைப்போல் இரு
மென்மையோடு
மணத்தோடு
புதிரான வாழ்க்கையைப்
புன்னகையோடு எதிர்கொள்ளும்
வலிமையோடு
எவரிடத்தும் கடனாய் வாங்காத
இயற்கையான வர்ணங்களோடு
ஒரு பூவைப்போல் இரு
*

அந்த நாளில்

அன்புகூர்ந்து
என்னைப் புதைக்கும்
போது
கூடவே
என் குற்றங்களையும்
புதைத்து விடுங்கள்

என் பிரிவு தாளாமல்
வெளியேறும் உங்கள்
கண்ணீருடன்
தயவுசெய்து
என் நினைவுகளையும்
வெளியேற்றி விடுங்கள்
*

Sunday, February 17, 2008

எடிசன் எழுதுகிறேன்

இருளைப் படைத்து
என்னை வெளிச்சத்திற்குக்
கொணர்ந்த இறைவனே
உனக்கு
எடிசன் எழுதுகிறேன்:

விண்ணில் உன் நட்சத்திரங்கள்
மண்ணில் என் விளக்குகள்

பகலை நீ வெளிச்சப் படுத்துகிறாய்
இரவை நான் அலங்கரிக்கிறேன்

உன் ஒற்றை விளக்குச் சாயும் போது
ஓராயிரம் விளக்குகளை நான்
ஏற்றி வைக்கிறேன்

உன் ஒளி புகமுடியாத
இடங்களில் கூட
என் விளக்குகள் எரிகின்றன

சூரியத் தூரிகைகள்
உன் பெயரை வரைகின்றன

விளக்கின் நாக்குகள்
என் புகழைப் பாடுகின்றன

அணையாத விளக்குகளின்
சொந்தக்காரன் நீ

அணையும் விளக்குகளை
ஆக்கியவன் நான்

நாம் இருவரும்
விளக்கின் காதலர்கள்

நம் ஒற்றுமை
வெளிச்சத்தில் மட்டுமல்ல
இருளிலும் மறைவதில்லை

இறைவா , எவரும்
என் விளக்குகளை அணைக்கலாம்;
என்னை அணைக்க முடியாது
ஏனெனில்
நான்
நீ ஏற்றிய விளக்கு

Saturday, February 16, 2008

வாழ்க்கைத் துணி

முதுமை
கிழிசல் அல்ல ;
தையல்

வாலிபம் கிழித்த
வாழ்க்கைத் துணியைத்
தள்ளாடும் முதுமைதான்
தைத்துக் கொடுக்கிறது

இருள்
இளமையின் நிறம்
முதுமை
வெள்ளையடித்த வெண்பா

சாயம் வெளுத்தாலும்
மரியாதை பெறுகிறது
முதுமை

சாவோடு கைகுலுக்க
ஒத்திகை நடத்துகிறது
கை

மரணத்தை வரவேற்று
ஆடிக் கொண்டிருக்கிறது
உடல்கொடி

முதுமை
வெற்றிதரும் பலவீனம்

இளமை
தோற்றுப் போகும் பலம்

முதுமையால்
அலங்கரிக்கப் படுவதே
நம் விருப்பம்

*